ஆகாச கருடன்

ஆகாச கருடன்

சித்தர்களின் அபூர்வமான மூலிகைகள் பல உள்ளன அவற்றை அவ்வப்போது படங்களுடன்,உபயோகத்தையும் விளக்கி வருகிறேன்.இந்தப் பதிவில் அத்தகைய ஒரு சிறப்பான மூலிகை ஒன்றை அறிமுகம் செய்வதில் பெருமிதம் கொள்கிறேன். மூலிகைகளில் அஷ்டகர்ம மூலிகைகள் என்பன மிகச் சிறப்பு வாய்ந்தன.இவை அஷ்ட கர்மமான மாந்திரீக கர்மங்களுக்கு உதவுவன.


எடுத்துக்காட்டாக தொட்டாற் சிணுங்கிச் செடிகளை செய்வினை மற்றும் ஏவல்,பில்லி சூனியத்துக்காக மண் பொம்மை,மற்றும் மாப்பொம்மை செய்யும்போது அதன் உள்ளே வைத்துச் செய்து அதற்கான மந்திரங்களை உருவேற்றி,யாருக்குச் செய்வினை செய்ய வேண்டுமோ அவர் பெயரில் இந்த பொம்மை உருவேற்றப்படும்.பின் இந்த பொம்மைக்கு எந்த இடத்தில் ஊசி செருகப்படுகிறதோ அந்த இடம் செயலிழக்கும்.பின் அந்த பொம்மையின் இருதய ஸ்தானத்தில் ஊசி செருகப்படும் போது மாரடைப்பாலோ,வேறு காரணங்களாலோ உயிர் பிரியும்.


இவ்வளவு சக்தியுள்ள மூலிகைகளை நல்லவற்றுக்கும் பயன் படுத்தி உள்ளனர்(இதில் கெட்ட செய்கைகளுக்கு யாரும் பயன்படுத்தப்படக் கூடாது என்பதால் செய்வினை செய்தலில் சில சூட்சுமங்கள் மறைக்கப்பட்டுள்ளன.தயவு செய்து இது குறித்து மேலும் கேள்விகள் கேட்க வேண்டாம்).அது போல நம்மை அழகாகப் பாதுகாக்கும் ஓர் மூலிகையை இங்கே விவரிக்கிறேன்.எனது வீட்டில் உள்ள ஆகாச கருடன் படமே இது.

ஆகாச கருடன்

ஆகாச கருடன்

கட்டிப் போட்டால் குட்டி போடும் என்றழைக்கப்படும் ஆகாச கருடன் கயிற்றில் கட்டித் தொங்கவிட்டால், காற்றில் உள்ள ஈரக் காற்றை உறிஞ்சிக் கொண்டே கொடி வீசித் தளிர்க்கும்.இது வெகு சீக்கிரம் தழைத்து வளர்ந்தால் வீடு சுபிட்சமாக இருக்கும்.இந்தக் கிழங்கு ஒரு கருடனுக்குச் சமம்.அதாவது கருடன் வந்தால் அந்த இடத்தில் எந்த விஷ ஜந்துக்களும் அணுகாது.அப்படி வந்தால் அவற்றின் விடம் பங்கப்படும்.அவ்வளவு சக்தியுள்ளது இந்த ஆகாச கருடன் கிழங்கு.


கருடன் கிழங்கு இருக்கும் இடத்தில் ஏவல், பில்லி சூனியம்,செய்வினை போன்றவை அணுகாது.அப்படி மீறிய சக்தி வந்தால் இந்த ஆகாச கருடன் தன்னுயிரை விட்டு நம்மைக் காத்துவிடும்.அதாவது இதை மீறிய சக்தி நம்மைத் தாக்க வந்தால் ஆகாச கருடன் அதன் உயிரை அச்சக்திக்கு பலியாக இட்டு நம்மைக் காக்கும்.(மீச்சக்திக்கு பலியான கிழங்கு கருகி அழுகிவிடும்).

இந்தக் கிழங்கை நஞ்சு முறிவிற்காக கொடுப்பர்.இதற்கு கொல்லன் கோவை,பேய்ச் சீந்தில் என்றும் அழைப்பர்.தாவரப் பெயர்:- BRYONIA EPIGOEA.


அரையாப்பு வெள்ளை யகலாக் கொறுக்கை

கரையாத கட்டியிவை கானார்- வரையிற்

றிருடரெனச் செல்லும்விடஞ் சேர் பாம்பு

கருடன் கிழங்கதனைக் கண்டு.


கருடன் கிழங்குக்கு அரையாப்புக் கட்டி, வெள்ளை, கொருக்கு மாந்தை, அற்புத விரணம், ஆகியவைகள் தீரும்.கடும் விஷத்தையுடைய சர்ப்பங்கள்(பாம்புகள்) இந்தக் கருடன் கிழங்கைக் கண்டால் அஞ்சி நடுநடுங்கும்.


துட்டவிஷம் பாண்டுவெப்பு சூலைவா தங்கிரந்தி

குட்ட மரிப்பக்கி கோண் குடனோய்- கெட்டகண்ட

மாலைபோங் கொல்லன்கோ வைக்கிழங்கால் முத்தோஷ

வேலைப்போம் பாரில் விளம்பு.


கொல்லன் கோவைக் கிழங்கால் மஹா விஷம், தேக வெளுப்பு, சுரம், வாதசூலை, சிரங்கு, பெரு வியாதி, நமைச்சல், வக்கிர நேத்திரம், குடல் வலி, கண்டமாலை, திரி தோஷம் ஆகிய நோய்கள் தீரும்.

செய்கை:-வியதாபேதகாரி(ALTERNATIVE){வியாதியை நாளுக்கு நாள் குணமாக்கிச் சரீரத்தை ஆரோக்கிய நிலையில் கொண்டு வரும் மருந்து},

பலகாரி(TONIC){தாதுக்களுக்கு பலம் கொடுக்கும் மருந்து}.    

உபயோகிக்கும் முறை:- இந்தக் கிழங்கை அரைத்து கொட்டைப் பாக்களவு 2-3 அவுன்ஸ் வெந்நீரில் கலக்கி தினம் ஒரு வேளையாக 3 நாள் கொடுக்க நாய், நரி, சிறுத்தை, குரங்கு, பூனை, குதிரை, முதலை, வேங்கை, இவைகளின் கடி விஷங்களினால் உண்டான பற்பல தோஷங்கள் போகும்.கடி வாயிலும் இதனை அரைத்துப் பூசுதல் நன்று. இதனில் இரண்டொரு கடலைப் பிரமாணமுள்ள துண்டுக் கிழங்கை வெற்றிலையுடன் கூட்டிக் கொடுக்க தேள்,நட்டுவக்காலி இவைகளினால் உண்டான விஷமும் நெறி கட்டுதலும் போகும்.


கருடன் கிழங்கு,குப்பை மேனி, அவுரி, ஆவாரை, கீழ்காய் நெல்லி(இலைக்கு கீழ் காய் காய்ப்பதால் இவ்வாறு அழைப்பார்கள்.கீழாநெல்லி என்பதும் கீவா நெல்லி என்பதும் இதுவே),இவ்வைந்து இலைகளையும் இடித்து சாறு பிழிந்து உள்ளுக்குள் கொடுத்து,உடம்பில் துவாலையிட(உடம்பில் மேற்பூச்சாக பூச)அஷ்ட நாக விஷங்களும் போகும்.


கடும் விஷ நாகங்கள் கடித்தவருக்கு ஒரு எலுமிச்சம் பழம் அளவு நறுக்கி தின்னும் படி செய்ய வாந்தி பேதி ஏற்பட்டு நஞ்சு முறியும்.நோயாளரை ஒரு 24 மணி நேரத்திற்கு தூங்க விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது முக்கியம்.


இந்த ஆகாச கருடன் கிழங்கை சிறு துண்டுகளாக நறுக்கி பாலில் வேக வைத்து,நிழலில்காய வைத்து,தூளாக்கி துணியில் சலித்து(வஸ்திர காயம் செய்து) எடுத்துக் கொண்டு பேய்ச் சுரைக் கூட்டில் நாற்பத்தெட்டு நாட்களுக்கு குறையாமல் வைத்திருந்து, நாற்பத்து எட்டு நாட்கள் சாப்பிட குட்டம்,மண்ணுளிப்பாம்பின் நஞ்சு, தீரும்.உடல் காயசித்தியாகும்.     


இந்த ஆகாச கருடன் ஆகாய பூதத்தின் சக்தியை அதிகம் கொண்ட கிழங்காதலால் இதில் உயிர்ச்சக்தி அதிகம் உள்ளது.உயிர் உடலை விட்டு ஓடும்போது முதலில் ஆகாய பூதத்தை எடுத்துக் கொண்டுதான் ஓடும்.இந்தக் கிழங்கை நாம் படுக்கும் இடத்திலோ,பூஜை செய்யும் இடத்திலோ,அமர்ந்து வேலை செய்யும் இடத்திலோ கட்டி வைத்தால் நமது தலைக்கு அது ஆகாய பூதத்தின் சக்தியை கொடுத்து வரும்.இதனால் நமது ஆயுள் பெருகும்.ஞானமும் நம்மைத் தேடி வரும்.ஏனெனில் ஆகாயம் சிதம்பரம்.சிவனாகிய சிவன் அதனால்தான் அங்கே சிவ பாகமான வலது கால் தூக்கி ஆடுகிறான்.