தமிழின் பெருமை, ஞானம், தீர்க்க தரிசனமும் , தற்போது தமிழில் பேசக் கூசும் நிலையும் (பாகம் 2)

தமிழின் பெருமை, ஞானம், தீர்க்க தரிசனமும் , தற்போது தமிழில் பேசக் கூசும் நிலையும் (பாகம் 1)ஐ படித்துவிட்டு இந்த பாகத்தை படித்தால்தான் தொடர்பு விட்டுப் போகாமல் புரியும்.

அவ்வையாரது தந்தையார் அவருக்கு  திருமணம்  நிச்சயிக்கும்  போது “இந்த இளமை தனக்கு வேண்டாம் என்று நினைத்தும் தன்   இளமை உரு வேண்டாம் என்றும் தனக்கு முதிய உருவம் வேண்டும் என்றும்  விநாயகரிடம் வேண்டுகிறார் . “அதன் படி முதிய உருவம் வழங்கி விநாயகர்  வரம் அருளும் காட்சி . இந்த அளவிற்கு ஞானம் அளிப்பது தமிழ்.இவர் மக்களுக்கு அளிக்கும் ஞானமும் , மன்னர்கள் இவருக்கு அளிக்கும் மதிப்பும்  பூரண கும்ப மரியாதையும் இந்த காணொளிக் காட்சிகளில் தெள்ளத் தெளிவாக விளங்குகிறது!!! இப்படிப்பட்ட நிகழ்வை நிகழ்த்த வேண்டும் என்றாலே  ஒரு தெளிவான அறிவும், ஞானமும் ,தீர்க்க தரிசனமும்  வேண்டும்  என்று புரிகிறதல்லவா?அந்த ஞானத்தையும் ,தீர்க்க தரிசனமும் , தெளிவான அறிவும் அருளுவது தமிழ் என்பது புரிகிறதல்லவா?

ஒரு நாள் ஒரு பாழடைந்த மண்டபத்தில்  தங்கப் போகும் போது அந்த  பாழடைந்த மண்டபத்தில் ( திருவாசற் சாவடி ) பேய் இருக்கிறது என்றும் அது அங்கே தங்குகின்றவர்களை அடித்துக் கொன்று போட்டுவிடுகிறது  என்றும் அங்கே நின்ற வழிப் போக்கர்கள் ஊர்க்காரர்களும் கூறுகின்றனர்.இறைவன் அருளால் அந்தப் பேய் எம்மை ஒன்றும் செய்யாது என்று கூறி அங்கேயே தங்குகிறார் ஔவையார் .முதல் ஜாமத்தில் அந்தப் பேய்  மற்றவர்களை அடித்துக் கொன்று போடுவது போல் அவரையும் ,  அடித்துக் கொன்று போட எற்று ,எற்று என்று கூச்சலிட்டவாறு வருகிறது .

அப்போது ஔவையார் அந்த பேயின் முன்பிறவியை தனது தீர்க்க தரிசனத்தால் அறிந்து ,ஒரு நாட்டின் இளவரசியானவள் ( ஏலவார் குழலி ) , அவள் பூப்பந்தாடும் போது கண்ட எழுதப் படிக்கத் தெரியாத தற்குறியான ஒரு பக்கத்து நாட்டு இளவரசனுக்கு காதல் கடிதம் எழுதி தோழி மூலம் கொடுத்தனுப்பி,  வசந்த மண்டபத்திற்கு இரவில் வரச் சொல்ல, அந்த இளவரசன் அந்தக் காதல் கடித விபரத்தை அறிய ஒரு போலித் துறவியிடம் வாசிக்கக் கொண்டு போய் கொடுக்க , அவன் அதில் உள்ள விடயத்தை மாற்றி அரசன் உன்னை மாறு கால் மாறுகை வாங்கி கொல்லச்  சொல்லி இருப்பதாகக் கூறி அவனை மிரட்டி ஊரை விட்டு ஓட வைத்துவிட்டு ,  இரவில் வசந்த மண்டபத்திற்கு வந்த இளவரசியை , பெண்டாள முயற்சிக்க அந்த இளவரசி தற்கொலை செய்து கொண்டு  இறந்து ,  பேயாகி அந்த வசந்த மண்டபத்தையே பாழ் மண்டபமாக மாற்றி , அங்கேயே திரிந்து கொண்டு அங்கு வருபவர்களை அறைந்து  கொன்று கொண்டிருந்தாள்.

பேய்

ஔவையார் அந்தப் பாழ் மண்டபத்தில் இருந்த பேயின் பூர்விகத்தை தெரிந்து , கொண்டு அந்தப் பேயைப் பார்த்துப் பாடிய பாடல் .

வெண்பா இருகாலிற் கல்லானை வெள்ளோலை

கண்பார்க்கக் கையால் எழுதானை -பெண்பாவி

பெற்றாளே பெற்றாள் பிறர் நகைக்கப் பெற்றாளென்

றெற்றோமற் றெற்றோமற் றெற்று.

வெண்பாப் பாடுவதையும், வெள்ளை நிற ஓலையில் கண் பார்க்க கையால் எழுதுவதையும் , வாசிப்பதையும் பதினாறு வயதுக்குள் (ஒரு கால் என்பது எட்டு வருடம்) தெரிந்து கொள்ளாத (பழைய பிறவியில் இளவரசன் எழுதப் படிக்க தெரியாதவன் ) ஒருவனை பெற்றவள் பாவி . தற்குறியான அந்த இளவரசனைப் பெற்றவளை போய் எற்று (எத்தி உதைத்தல்) ,என்று கூறியவுடன் , எழுத்து வாசனையே அறியாத மூடனை இச்சித்ததனை தெரிந்து சொல்லும் இவள் தேவியே ஆவாள் என எண்ணி , ஔவையாரின் அறிவும்,  ஞானமும் , தீர்க்க தரிசனமும் கண்டு அஞ்சி பயந்து ஓடிப்போனது.

மீண்டும் இரண்டாம் ஜாமத்தில் அந்தப் பேய்  ஔவையாரை அடித்துக் கொன்று போட எற்று ,எற்று என்று கூச்சலிட்டவாறு வருகிறது .அப்போது ஔவையார்

கருங்குளவி சூரைத்து றீச்சங் கனிபோல்

விருந்தினர்க்கொன் றீயாதான் வாழ்க்கை – அரும்பகலே

இச்சித் திருந்தபொருள் தாயத்தார் கோள்வரென்

றெற்றோமற் றெற்றோமற் றெற்று.

கருங்குளவி வாழும் ஈச்ச மரத்தின் கனி யாருக்கும் பயன்படாதது போல விருந்தினருக்கு ஒன்றும் கொடாதவனுடைய செல்வத்தை அவனுடைய தாயாதியர் ஏமாற்றிப் பிடுங்கிக் கொள்வார்கள்.அப்படி தெரிந்திருந்தும் விருந்தினருக்கு ஒன்றும் கொடாத அந்த  ஈயாத லோபியைப் போய் எற்று ,என்று கூறியவுடன் ஔவையாரின் அறிவும்,  ஞானமும் , தீர்க்க தரிசனமும் கண்டு அஞ்சி அந்த அலகை (அலைவதால் பேய்க்கு அலகை என்று பெயர் ) பயந்து ஓடிப்போனது.

மீண்டும் மூன்றாம் ஜாமத்தில் அந்தப் பேய்  ஔவையாரை அடித்துக் கொன்று போட எற்று ,எற்று  என்று கூச்சலிட்டவாறு வருகிறது .அப்போது ஔவையார்

வானமுளதால் மழையுலதால் மண்கில்

தான முளதால் தயையுளதால்- ஆனபொழு

தெய்த்தோ மிளைத்தோம் என்றேமாந் திருப்போரை

எற்றோமற் றெற்றோமற் றெற்று.

வானம் , மழை , மண்ணுலகு , தானம் , தயை இவை எல்லாமிருந்தும் , எம்மாலாகாது என்று முயன்றோம் முடியவில்லை என்று இளைத்து ஏமாந்திருப்போரை போய் எற்று ,என்று கூறியவுடன் ஔவையாரின் அறிவும்,  ஞானமும் , தீர்க்க தரிசனமும் கண்டு அஞ்சி அந்த ஆவி (ரூபமில்லாமல் வெறும் வாசனை மாத்திரம் இருப்பதால் பேய்க்கு ஆவி என்று பெயர் ) பயந்து ஓடிப்போனது.

மீண்டும் நான்காம் ஜாமத்தில் அந்தப் பேய்  ஔவையாரை அடித்துக் கொன்று போட எற்று ,எற்று என்று கூச்சலிட்டவாறு வருகிறது .அப்போது ஔவையார்

எண்ணா யிரத்தாண்டு நீரிற் கிடந்தாலும்

உண்ணீரம் பற்றாக் கிடையே போல் – பெண்ணாவார்

பொற்றொடி மாதர் புணர்முலைமேற் சாராரை

எற்றோமற் றெற்றோமற் றெற்று.

எட்டாயிரம்  ஆண்டுக் காலம் தண்ணீரில் கிடந்தாலும் ஈரப்பசையே ஏறாத நெட்டி (கருங்காலி) மரம் (அந்தக்காலத்தில் தண்ணீரிலேயே கிடக்கும் படகு, போன்றவை செய்வதற்கு தண்ணீரில் ஊறாத  தன்மையுள்ளதால் இந்த நெட்டி மரத்தை உபயோகிப்பார்கள் ,  தற்போது அய்னி, வாகை, கருவேலம் மற்றும் வேம்பு வகை மரங்களைப் பயன்படுத்துகிறார்கள்) போல  மாதர்கள் முலைமேற் சார்ந்து காம இன்பம் அனுபவிக்காதவர்களைப் போய்  போய் எற்று ,என்று கூறியவுடன் ஔவையாரின் அறிவும்,  ஞானமும் , தீர்க்க தரிசனமும் கண்டு அஞ்சி அந்த ஆவி  பயந்து  சரணடைந்தது.பின் பணிந்து வணங்கியது .

பின் ஔவையார் ஏலவார் குழலிக்கு சுய உருவம் அளித்து அடுத்த பிறவியில் தமிழறியும் பெருமாளாக பிறந்து ,  அவள் விரும்பிய மணாளனையே அடைந்து வாழ வரம் அருளினார் . அதே போல் ஏலவார் குழலி , தமிழறியும் பெருமாளாகப் பிறந்து நக்கீரர் அருளால் விறகுத் தலையனாகப் பிறந்து இருந்த இளவரசனை மணமுடித்து இன்புற்றாள் .

பதிவு பெரிதாகப் போவதால் அடுத்த பதிவான  தமிழின் பெருமை, ஞானம், தீர்க்க தரிசனமும் , தற்போது தமிழில் பேசக் கூசும் நிலையும் (பாகம்3 ) ல்தொடரலாம்.