துத்தி(ஒரு அற்புத மஹா மூலிகை) பாகம் 2

துத்தியிலை(ஒரு அற்புத மஹா மூலிகை) பாகம் 2

Dakshinamurty

துத்தி(ஒரு அற்புத மஹா மூலிகை) பாகம் 1 ஐ படித்துவிட்டு இந்தக் கட்டுரையை படித்தால் தொடர்பு விட்டுப் போகாமல் மிக நன்றாக விளங்கும்.

கீழே குறிப்பிட்டு குணபாடம் குறித்து விளக்கியிருக்கும் துத்தி வகைகளைத் தவிர ஒட்டுத் துத்தி, சிறு துத்தி, பசும் துத்தி, கருந்துத்தி,  எலிக்காது துத்தி, முடக்கு துத்தி, நாம துத்தி, ராத்துத்தி,பால் துத்தி,  ஐயிதழ்துத்தி, காட்டுத் துத்தி, கொடித்துத்தி, நாமத்துத்தி,  பொட்டகத்துத்தி, ஆகிய வகைகளும் உள்ளன.

துத்தி என்ற  அற்புத மூலிகை தேவ குருவான , வியாழன்  என்றழைக்கப்படும் பிருகஸ்பதியிற்கான அஷ்ட கர்ம மூலிகை.ஆண்களுக்கும், பெண்களுக்கும், ஏற்படும் திருமணத்தடை .7 ம் இடமான களத்திர ஸ்தானமான கணவனுக்கு மனைவியையும் , மனைவிக்கு கணவனையும் தீர்மானிக்கும் இடம் .அதாவது யோனிப் பொருத்தமான இனபெருக்க (ஆண், பெண்  குறிப் பொருத்தத்தை) தீர்மானிப்பது.இந்தப் பொருத்தம் அமையாவிட்டால் இல்லறம் இனிய முறையில் அமையாது.

வியாழனின் கருணைப் பார்வை இல்லை என்றால் ஆண்களுக்கு ஏற்படும் விந்துக் குறைபாடு , ஆண்குறி விரைப்பின்மை , விந்து வளர்ச்சியில் குறைபாடு (தலை,வால் இல்லாத விந்தணுக்கள் ), விதைப்பை குறைபாடு , விதைப்பையில் இருந்து விந்து வெளியேறும் குழாயில் அடைப்பு ,விரை வீக்கம் , போன்ற  வியாதிகள் ஏற்படும்.

பொன்னன் என்ற வியாழனின் கருணைப் பார்வை இல்லை என்றால் பெண்களுக்கு கருப்பை வளர்ச்சியில் குறைபாடு , கருமுட்டை வளர்ச்சியில் குறைபாடு , மாதாந்திர விலக்கில் ஏற்படும் மாறுபாடுகள் , சூதகக் கட்டு, கருமுட்டை வெளியேறும் குழாயில் அடைப்பு ,சூலகங்களில் ( OVARIES ) ஏற்படும் குறைபாடுபோன்ற  வியாதிகள் ஏற்படும்.

பொன்னன் என்ற தேவகுருவான வியாழனின் கருணைப் பார்வை இல்லை என்றால் ஆண்களுக்கும் , பெண்களுக்கும், சிறு நீரகம்,சிறு நீரகக் குழாய், சிறு நீர்ப்பை , சிறு நீர்ப்புற வழி ,கீழ்வயிறு , குதம் , மலவாய்( நவ மூலம் , பவுத்திரம் ) ,  இவற்றில் ஏற்படும் குறைபாடுகள் போன்ற  வியாதிகள் ஏற்படும்.குழந்தைப்பேறு இன்மையும் ஏற்படக் காரணம் ஆகும்.இந்தக் குறைபாடுகள் அனைத்தும் துத்தியை உபயோகித்து சிகிச்சை அளிக்க சூரியனைக் கண்ட பனி போல ஓடும் .

துத்தியிலை:-

மூலநோய் கட்டி முளை புழுப்புண் ணும்போகுஞ்

சாலவதக் கிக்கட்டத் தையலே – மேலுமதை

எப்படியே னும்புசிக்கி லெப்பிணியுஞ் சாந்தமுறு

மிப்படியிற் றுத்தியிலை யை

( பதார்த்த குண விளக்கம் )

குணம் :- துத்தி இலையை ஆமணக்கு நெய்யால் ( விளக்கெண்ணெயால் ) வதக்கிக் கட்ட மூலரோகம் , கட்டி , விறமுளைகளும் , கிருமி விரணமும் போகும் . அதை எப்படிப் பாகம் செய்து , எந்த விதமாகச் சமைத்துச் சாப்பிட்டாலும் சகல ரோகங்களும்    ( நோய்களும் ) போகும்.

செய்கை:-அந்தர்ஸ்நிந்தகாரி

உபயோகிக்கும் முறை:-துத்தி இலையை சிற்றாமணக்கெண்ணெய் சிறிதுவிட்டு வதக்கி மூல உபத்திரவம் இருப்பவர்களுக்கு ஆசனத்தில் வைத்துக் கட்ட 2-3 வேளைகளில் கடுப்பு நீங்கும் .உஷ்ணத்தினால் வந்த கட்டிகளுக்கு அரைத்து வைத்துக் கட்ட கட்டிகள் உடையும் . இந்தக் கீரையை உடைத்த பச்சைப் பயறு அல்லது துவரம் பருப்பிட்டுப் பாகப்படி வேக வைத்துக் கடைந்து அன்னத்துடன் கூட்டி உண்ண மூலாதாரத்திலுள்ள வாயுவைக் கண்டிக்கும்.மலத்தை இளகலாகப் போக வைக்கும் .

இதன் சமூலத்தை ( மொத்தச் செடியையும் ) வேளைக்கு 1 பலம் ( 35 கிராம் ) தட்டி , ஒரு மட்கலயத்தில் போட்டு 1/2 படி சலம் விட்டு  வீசம் படியாகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி சர்க்கரை கூட்டிக் 3 வேளையாகக் கொடுத்து வரத் தினவு , சொறி , சிரங்கு முதலியன போகும் . மேலும் இந்தக் கியாழத்துக்கு ( கஷாயத்திற்கு ) குடலில் உண்டான புண் , நீர்ச்சுரறுக்கு ,  தொண்டைக் கம்மல் , காமாலை , மருந்துகளின் வீ று ( அதாவது  சரியாக முடிக்கப்படாத விஷம் உள்ள மருந்துகளால் உண்டான கடும் விளைவுகள் ) குண்டிக்காயில் ( சிறு நீரகம் ) உள்ள வலி  (பலர் இதற்காக சிறு பிள்ளைகளை விட்டு கீழ் முதுகை மிதிக்கச் சொல்வர் ) , இவற்றை நீக்கும் .

முறிந்த எலும்பை ஒன்று சேர்த்து இந்த இலையை அரைத்து மேலே கனமாகப்  பூசிச சீலை சுற்றி அசையாமல் இருக்கும் பொருட்டு மூங்கில் பத்தைகளை வைத்துக் கட்ட எலும்பின் முறிவு கூடும் .

இந்த இலையை காய வைத்துச் சிறுநீர் விட்டு அரைத்துக் குழந்தைகளுக்கு உண்டாகும் கபால கரப்பானுக்குப் போடக் குணமாகும் . இந்தத்துத்தி இனத்தில் கருந்துத்தி , சிறு துத்தி , நிலத் துத்தி, போன்ற பல வகைகள் இருந்தாலும் கூட , இவைகள் யாவும் குணத்தில் அதிக மாறுதல்கள் கிடையாது. ரோகத்தின் வன்மை , மென்மைக்கு ஏற்றாற் போல் மருந்துகளில் கூட்டிக் கொள்ளலாம் .

பதிவு மிகப் பெரியதாகப் போவதால்  வெண்துத்தி , கருந்துத்தி , சிறுதுத்தி , நிலத்துத்தி , துத்தி விதை  பற்றி  துத்தி ( ஒரு அற்புத மஹா மூலிகை ) பாகம் 3 ம் பாகத்தில் தொடர்ந்து வெளிவரும் .